‘மானாட மயிலாட‘ கடந்த மூன்று வருட காலமாக கலைஞர் டிவியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்ட மிகப் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி. விதவிதமான அரங்குகள், ஆர்ப்பரிக்கும் நடனங்கள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட ஒரே நிகழ்ச்சி இதுவென்றால் அது மிகையாகாது. இந்த நிகழ்ச்சி பகுதி 1, 2, 3, என பல வாரங்களையும் தாண்டி வெற்றிக் கண்டது. இன்று மானாட மயிலாட பகுதி 4-இன் இறுதி முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், மிகவும் கலைநயமிக்க அரங்கில், ரசிகர்களின் பேரொலியுடன் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருபவர் யார் என்று ஒரு வாரத்திற்கு முன்பே சஸ்பென்ஸாக இருந்தது. ஏனென்றால் முதல் பாகத்தில் நடிகர் விஜய், இரண்டாம் பாகத்தில் நடிகர் சூர்யா, மூன்றாம் பாகத்தில் ஸ்ரேயா என சினிமா பிரபலங்களை மேடையேற்றிய கலா மாஸ்டர் இந்த முறை யாரை அழைக்கவிருக்கிறார் என்பதே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.
சரியாக 5 மணிக்கெல்லாம் விழா இனிதே ஆரம்பமானது. போட்டியாளர்களின் நடனம், மனோ, சுகுமாரின் காமெடி, என வழக்கம்போல் நிகழ்ச்சிகள் அரங்கேறின. ஒவ்வொரு போட்டியாளருக்கும் நினைவு பரிசுகளை நடிகை தேவயானி, நடிகை ரம்பா, மாஸ்டர் ரகுராம், நடிகை குஷ்பு, நடிகை நமீதா, இயக்குனர் ராம நாராயணன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியாக, போட்டியின் முடிவுகளை அறிவிப்பவராக நடிகர் சிலம்பரசன் (சிம்பு) மேடையேற்றப்பட்டார். அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மேடையில் குவிந்திருக்க போட்டியின் முடிவுகளை சிம்பு வெளியிட்டார்.
போட்டியின் நான்காவது பரிசான எல்சிடி டிவி ரகுமான்-நிகிஷா ஜோடிக்கும், மூன்றவாது பரிசான 3 லட்சம் ரூபாய் லோகேஷ்-ஸ்வேதா ஜோடிக்கும், இரண்டாவது பரிசான 5 லட்சம் ரூபாய் நிவாஷ்-கிருத்திகா ஜோடிக்கும், முதல் பரிசான 10 லட்சம் ரூபாயை கோகுல்-நீபா ஜோடிக்கும் வழங்கினார் சிம்பு.
இத்துடன் இவ்விழா இனிதே நடந்து முடிந்தது. விழாவின் முடிவில் நிகழ்ச்சியின் இயக்குனர் கலா மாஸ்டர் மற்றுமொரு இன்ப அதிர்ச்சி அளித்தார். அதாவது அடுத்த மானாட மயிலாட பகுதி 5ன் இறுதி சுற்றில் முதலிடம் பிடிப்பவருக்கு 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு புத்தம் புதிய வீடு பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று கூறினார்.
இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறன்று இரவு 7.30 மணியளவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.
Post a Comment